*திருக்குறளா? திருவள்ளுவரா?*
Thirukkural Shorts Videos:
திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை. சாதி, மதம், மொழி, இனம், நாடு என்கிற பேதங்களைக் கடந்து எல்லா காலத்திற்கும் பொருந்தும் உண்மைகளை வள்ளுவன் கொடுத்திருக்கிறான். பாரதியாரும்,
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ் நாடு”
என்று கொண்டாடினான்.
அப்படிப்பட்ட வள்ளுவனுக்கு காவி உடுத்தி திருநீறு பூசி மதம் என்கிற சிறிய வட்டத்திற்குள் சுருக்குவதா?
திருக்குறளை உற்று நோக்கினால் ஆங்காங்கே சில இடங்களில் இந்து மத நம்பிக்கைகளை வள்ளுவன் பயன்படுத்தியிருப்பதை நாம் பார்க்க முடிகிறது. ஆதி பகவன், அடிஅளந்தான் (மூவுலகையும் தன் மூன்று அடியால் அளந்த வாமன அவதாரம்), அகல் விசும்புளார் கோமான் இந்திரனே (அகண்ட ஆகாயத்தின் வானோர் தலைவன்), எழுபிறப்பும், எழுமைக்கும் ஏமாப்புடைத்து, பிறவிப்பெருங்கடல் (மறுபிறப்பு) போன்றவை இந்து மத நம்பிக்கைகளை சார்ந்த கருத்துக்களாகும்.
அகத்தியர், திருமூலர், கோரக்கர், சிவவாக்கியர் போன்ற சித்தர் பரம்பரையோடு சேர்த்து திருவள்ளுவரையும் ஒரு சித்தராக கொண்டாடும், வழிபடும் மரபு தமிழக கோயில்களில் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இருந்தபோதிலும் வள்ளுவன் தன்னுடைய குறள் முழுவதிலும் எங்குமே தமிழ் என்கிற வார்த்தையை கூட உபயோகிக்கவில்லை. அவன் தன்னை ஒரு தமிழன் என்றோ ஒரு மதத்தினன் என்றோ தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவன் என்ன உடை அணித்திருந்தான், திருநீறு பூசியிருந்தானா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. சென்ற நூற்றாண்டு பழமையான படங்களில், ஓவியங்களில் வள்ளுவன் திருநீறு இட்டு இருப்பது போல் பார்க்கமுடிகிறது. அறுபதுகள், எழுபதுகளுக்கு பிறகு வந்த தமிழ் பாடநூல்களில் வள்ளுவனை திருநீறு இல்லாமல் வெள்ளை உடையிலேயே பார்த்திருக்கிறோம்.
ஒரு சாரார் வள்ளுவனுக்கு காவியும், திருநீறும் அணிவித்து அழகு பார்க்கிறார்கள், சொந்தம் கொண்டாடுகிறார்கள். ஒரு விதத்தில் இதில் தவறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது. அவன் தான் எல்லோருக்கும் சொந்தம் ஆயிற்றே? மறுசாரார் இதனை வன்மையாக எதிர்க்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர். உலகம் அனைத்திற்கும் பொதுவானவனான வள்ளுவனை ஒரு மதத்திற்குள் சுருங்குவது சரியில்லை என்பது அவர்கள் குமுறல், வாதம். இதிலும் உண்மை இருப்பது போலத்தான் தெரிகிறது.
எது எப்படியோ, இம்மைக்கும் மறுமைக்கும் பாடம் சொல்லும் குறள், உலகம் அனைத்திற்கும் பொதுவானதாகும். குறள் இனிமையை ருசித்தவர்கள் வள்ளுவனின் உடை பற்றி அதிகம் கவலைப்படமாட்டார்கள், வள்ளுவனின் உடை பற்றி அதிகம் கவலைப்படுபவர்கள் குறள் இனிமையை ருசிக்க மறந்து விடுகிறார்கள்.
No comments:
Post a Comment